பழம்பெரும் மலையாள நடிகை ஜமீலா மாலிக் காலமானார் – அவரது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு மோகன்லால் இரங்கல்

பழம்பெரும் மலையாள நடிகை ஜமீலா மாலிக் காலமானார் – அவரது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு மோகன்லால் இரங்கல்

பழம்பெரும் மலையாள நடிகை ஜமீலா மாலிக் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்; அவருக்கு வயது 74.

திருவனந்தபுரம்: பழம்பெரும் மலையாள நடிகை ஜமீலா மாலிக் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்; அவருக்கு வயது 74.

பழம்பெரும் மலையாள நடிகை ஜமீலா மாலிக் உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பலோடில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 74 ஆகும். மார்பில் வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஜமீலா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொல்லம் நகரில் பிறந்த ஜமீலா, புனே திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் கேரளப் பெண் என்கிற பெருமையைப் பெற்றவர். ஜமீலாவுக்கு அன்சார் மாலிக் என்கிற மகன் உள்ளார்.

1972-ஆம் ஆண்டு ‘ஆத்யதே கதா’ மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் அதிகமாக நடித்த ஜமீலா தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் தொடர்ந்து நடித்தார். குறிப்பாக ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல் என்கிற தமிழ்ப் படத்திலும் இவர் நடித்துள்ளார்.  திரையுலக வாழ்வை தொடர்ந்து சில தொலைக்காட்சித் தொடர்களிலும் ஜமீலா நடித்துள்ளார். 1983-ஆம் திருமணமாகி சில வருடங்களில் கணவனை விட்டுப் பிரிந்தார். ஜமீலா மாலிக்கின் மரணத்துக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜமீலாவின் இளம்வயது புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share this story