மீண்டும் இணைந்தது தல – யுவன் மாஸ் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்

மீண்டும் இணைந்தது தல – யுவன் மாஸ் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை: நடிகர் அஜீத்தின் 59-வது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

நடிகர் அஜீத் – இயக்குநர் சிவா 4-வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனையடுத்து அஜீத்தை, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் வினோத் இயக்க இருக்கிறார். இத்திரைப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாகவும் இரண்டு நாட்கள் நடைபெற்று பின்னர் ஜனவரி மாதம் முதல் முழுவீச்சில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் திரைப்படத்தில் பணிபுரியும் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், நடிகர் அஜீத் நடிக்கும் 59-வது திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பல வருடங்களுக்கு பிறகு அஜீத்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

பொதுவாக அஜீத் – யுவன் கூட்டணி சேர்ந்தாலே, அஜீத்திற்கான பாடல்களிலும், தீம் மியூசிக்கிலும் மாஸூக்கு பஞ்சம் இருக்காது. உதாரணமாக தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், பில்லா 2 படங்களை சொல்லலாம். ஆனால் பில்லா 2 படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணையாமல் இருந்ததால் அஜீத் ரசிகர்கள் இக்கூட்டணி இணைவதை எதிர்பார்த்து கொண்டிருந்தனர். தற்போது வினோத் இயக்கும் படத்தில் யுவனும் பணியாற்றுவதால் படமும், இசையும் வேற லெவலில் இருக்கும் என தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

Share this story