யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!

யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!

7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு வனத்துறை கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

வீட்டில் யானை தந்தங்கள் வைத்திருந்தது தொடர்பான  வழக்கில்,  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது மோகன்லால் வீட்டிலிருந்து நான்கு  யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மோகன் லால் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. யானை தந்தங்களைத் திருப்பிக் கேட்டு, அப்போதைய வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார். அரசு சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டு யானை தந்தத்தை திரும்பவும் மோகன்லாலிடமே வழங்கியது.

யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!

இதை எதிர்த்து ஏலூரைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு வனத்துறை  கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  அதில், மோகன்லால்,  ஒல்லூர் கிருஷ்ணகுமார், திருபுனித்துரா ராதாகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து இம்மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில்  நடிகர் மோகன்லால்  குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மனுத்தாக்கல் செய்தார். அதில், தந்தங்கள் வைத்திருக்க என்னிடம் லைசென்ஸ் இருக்கிறது. இருப்பினும் என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதில் ஏதோ சதி இருக்கிறது. என் புகழுக்கு களங்கம் உண்டாக்கவே இந்த செயல் நடத்தப்படுகிறது’ என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் நடிகர் மோகன் லால் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை டெய்லர்ஸ் சாலையை சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் உட்பட மேலும் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Share this story