வடசென்னை 2 எடுக்க வேணாம், தேவையேயில்லை: எதிராக கிளம்பிய கூட்டம், அப்செட்டான வெற்றிமாறன்

வடசென்னை 2 எடுக்க வேணாம், தேவையேயில்லை: எதிராக கிளம்பிய கூட்டம், அப்செட்டான வெற்றிமாறன்

வடசென்னை குறித்தான விவாத கூட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: ‘வடசென்னை’ குறித்தான விவாத கூட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த ‘வடசென்னை’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், ‘டேனியல்’ பாலாஜி, கிஷோர், பவன் என பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தது.

வடசென்னை வாழ்க்கை முறையை உண்மைக்கு நெருக்கமாகப் படமாகியிருப்பதாக பெரும்பாலானோர் பாராட்டிய நிலையில், வடசென்னையைச் சேர்ந்த பலர் படத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். படத்தில் இடம்பெற்ற வசைச்சொற்கள் குறித்தும், வாழ்க்கை முறை குறித்தும் விமர்சித்துப் பேசிய அவர்கள், ‘வடசென்னை எவ்வளவோ மாறி, முன்னேறி இருக்கும் நிலையில் இதுபோன்ற படங்கள் வடசென்னை மக்களை இழிவுப்படுத்துவதாக இருக்கின்றன’ என்று கூறினர். 

இந்நிலையில் இயக்குநர்  பா.ரஞ்சித்தின் ‘கூகை’ திரைப்பட இயக்கம் ஒருங்கிணைத்த வடசென்னை படம் குறித்தான கலந்துரையாடல் நடந்தது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் கரண் கார்க்கி, பத்திரிகையாளர் சுகுணா திவாகர், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோருடன் பல உதவி இயக்குநர்களும் திரைப்பட ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் படத்தின் நேர்மறை எதிர்மறை விஷயங்கள் பேசப்பட்டு பின் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு வெற்றிமாறன் பதிலளித்தார். 

அப்போது ஒருவர், ‘இன்னும் எத்தனைப் படங்களில் வடசென்னையை மோசமாகவே சித்தரிக்கப்போகிறீர்கள்? நான் வடசென்னையில் பிறந்து படித்து ITயில் பணிபுரிந்தவன்’  என்று கேட்க, “நான் இது எதையும் மறுக்கவில்லை. படத்தின் தொடக்கத்திலேயே ‘இது வடசென்னையின் ஒரு பகுதிதான்’ என்று கார்டு போட்டு மன்னிப்புக் கேட்டேன். மீனவ சமூகத்தின் மனம் காயப்பட்டது என்று கூறியதால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டேன். மற்றபடி மாரல் போலீசிங் செய்பவர்கள் பற்றி கவலையில்லை’ என்று அந்தக் கேள்விக்கு வெற்றிமாறன் விளக்கமளிக்க, உடனே இன்னொருவர் எழுந்து, ‘அது எப்படி சார் தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேப்பீங்க? நீங்க வடசென்னை2 லாம் எடுக்க வேணாம். தேவையேயில்லை… உங்களால எங்க வாழ்க்கையை சொல்ல முடியாது..’ என்று வெற்றிமாறனை விமர்சிக்கத் தொடங்கினார். இதனால் சற்று அதிர்ச்சியடைந்த வெற்றிமாறன் அதற்கு பதிலளிக்க முயல, அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு தொடர்ந்தது. கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர், ‘இது உதவி இயக்குநர்களுக்கான கூட்டம், இதில் நீங்கள் கலந்துகொண்டதே தவறு, மேலும் இப்படி பேசுவது தவறு’ என்று 
கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு 96 படத்தின் கலந்துரையாடல் கூட்டத்தில்  ‘சங்குத்தேவன்’ குறித்து கேள்வியெழுப்ப விஜய் சேதுபதி அதற்கு, காரமாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. 

Share this story