பாலிவுட்டில் குறிப்பிட்ட ரசிகர்களுக்காக படம் எடுக்கலாம், ஆனால் தென்னிந்திய சினிமா அப்படியில்லை – சமந்தா..

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை சமந்தா, பாலிவுட் – தென்னிந்திய சினிமா வித்தியாசத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
“பாலிவுட்டில் குறிப்பிட்ட ரசிகர் தரப்புக்குப் படம் எடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அங்கு எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. ஆனால், தென்னகத்தில் திரையரங்கில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் படம் பிடிக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் இப்போது ஓடிடி வந்த பிறகு இன்னும் துணிச்சலாகப் படமெடுக்கிறோம். அதனால் இப்போது வரும் படங்கள் சர்வதேச தரத்தில் இருக்கின்றன” என்று சமந்தா கூறியுள்ளார்.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இதன் இரண்டாவது சீஸனான, ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் நடிகை சமந்தா நடிக்கிறார். இதன் மூலம் ஓடிடி தளத்தில் சமந்தா அறிமுகமாகிறார்.
’தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் புரொமோஷனுக்காக தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். அதேபோல் இந்தத் தொடரின் நாயகனான மனோஜ் பாஜ்பாய் பேசுகையில், “நான் தென்னிந்திய திரைப்படத் துறையின் மிகப்பெரிய ரசிகன். புதிய சினிமா துறைகளைப் பற்றி ஆராய்ந்து, தெரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து கற்கும் வழக்கத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். பாலிவுட்டில் செய்வதை விட அவர்கள் கதை சொல்லும் விதம், நடிக்கும் விதம், அணுகுமுறை என எல்லாமே முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

