பாலிவுட்டில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘இடியட் ஆஃப் இஸ்தான்புல்’!
பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில், தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், கமலின் விக்ரம், ரஜினியின் வேட்டையன், மாமன்னன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார்.மலையாளம், தமிழ், தெலுங்கில் நடித்துள்ள அவர், விரைவில் இந்தியில் அறிமுகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. அவர் நடிக்கும் படத்தை இம்தியாஸ் அலி இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அதை உறுதிப்படுத்தியுள்ளார், இம்தியாஸ் அலி. அவர் அளித்துள்ள பேட்டியில், “அடுத்து ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்தை இயக்க இருப்பது உண்மைதான். அந்தப் படத்துக்கு ‘த இடியட் ஆஃப் இஸ்தான்புல்’ என்று தலைப்பு வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இதில் ஃபஹத் ஃபாசில் ஜோடியாக திரிப்தி டிமிரி நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.