எந்த சமூக வலைதளங்களிலும் நான் இல்லை – போலீசில் பரபரப்பு புகாரளித்த நடிகர் சார்லி !

எந்த சமூக வலைதளங்களிலும் நான் இல்லை – போலீசில் பரபரப்பு புகாரளித்த நடிகர் சார்லி !

எனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவங்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் சார்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சார்லி. பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக திரைப்படத்திற்காக தனது பெயரை ‘சார்லி’ என மாற்றிக்கொண்டார். கடந்த 1983ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பொய்க்கால் குதிரை’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கும் இவர், சுமார் 800க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஷ்ணு விஷாலின் ‘ஜீவா’ உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து சமீபகாலமாக ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பை பெற்று வருகிறார். இதற்கிடையே நடிகர், நடிகைகள் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலி கணக்கு துவங்குவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் நடிகர் சார்லியும் ட்விட்டரில் கணக்கு ஒன்று துவங்கிவிட்டதாக செய்தி வெளியானது.

எந்த சமூக வலைதளங்களிலும் நான் இல்லை – போலீசில் பரபரப்பு புகாரளித்த நடிகர் சார்லி !

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை நடிகர் சார்லி அளித்துள்ளார். அதில் தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த சார்லி, எனக்கு எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்கு இல்லை. ஆனால் என்னுடைய பெயரில் போலி கணக்கு ஒன்று ட்விட்டரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் போலி கணக்கு துவங்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் எனது பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கை ரசிகர்கள் பின்தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this story