மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா!? க/பெ. ரணசிங்கம் சினிமா விமர்சனம்!

மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா!?  க/பெ. ரணசிங்கம் சினிமா விமர்சனம்!

வேலைக்காக வெளிநாடு சென்ற கணவன் அங்கேயே இறந்துவிட, அவன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தனி மனுஷியாக மனைவி போராடும் கதைதான் ‘க/பெ. ரணசிங்கம்’.

தண்ணீர்ப் பஞ்சத்துக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் ரணசிங்கம் (விஜய் சேதுபதி). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருந்தாலும், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதுதான் அவரது வேலை. இதனால் அரசு அதிகாரிகளுக்கு இவரைக் கண்டாலே பிடிக்காது. பக்கத்து ஊரிலுள்ள அரிய நாச்சியாரைக் (ஐஸ்வர்யா ராஜேஷ்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் விஜய் சேதுபதி. மனைவி கேட்டுக் கொண்டதற்காக குடும்பத்துக்காக உழைக்க துபாய் செல்கிறார்.

Image

துபாய் சென்ற 2 வருடங்களுக்குப் பிறகு, அங்கு நடந்த கலவரத்தில் விஜய் சேதுபதி இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. அவர் உண்மையிலேயே கலவரத்தில்தான் இறந்தாரா? துபாயில் இருந்து அவர் உடலை தமிழகம் கொண்டுவர ஐஸ்வர்யா ராஜேஷ் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார் என்பது மீதிக்கதை.

பிரதான பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். காதல், சோகம், விரக்தி, கோபம் என எல்லா உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். நாடகத்தன்மையான காட்சிகளில் கூட இவரது இயல்பான நடிப்பு கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது. சற்றே நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில், ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். வழக்கம்போல காதல் காட்சிகளில் வெளுத்து வாங்குவதோடு, மக்கள் பிரச்னைகளைப் போரடிக்காமல் கூறியுள்ளார்.

மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா!?  க/பெ. ரணசிங்கம் சினிமா விமர்சனம்!

பவனிஸ்ரீ, வேல ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, முனீஸ்காந்த், நமோ நாராயணன், டி.சிவா, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சரியாகச் செய்துள்ளார். ஜிப்ரானின் பாடல்களும், பின்னணி இசையும் இந்தப் படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பின்னணி இசைக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவில் ராமநாதபுரத்தின் பொட்டல் காடுகள் கூட அழகாகத் தெரிகின்றன. படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதால், அவருக்காக சில காட்சிகளை சேர்த்தது போல் தெரிகிறது. வெளிநாட்டு

வேலையை வெறுக்கும் விஜய் சேதுபதி, பெரிதாக மறுப்பு சொல்லாமல் கிளம்பியது ஏன்? என்பது போன்ற குறைகள் படத்தில் உள்ளன. அதேசமயம், வெளிநாட்டில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடலை சொந்த வீட்டுக்குக் கொண்டுவர என்னென்ன செய்ய வேண்டும் என்ற விஷயத்தை மிகத் தெளிவாக கூறியுள்ளனர்.

Image

விவசாயம், தண்ணீர், அரசு செயல்பாடு தொடங்கி செங்கொடிவரை படம் முழுக்க ஆங்காங்கே அரசியல் தூவல்கள் அதிகம் உள்ளன. படத்தின் நீளம் அதிகமோ அதிகம். இதனால் படம் பார்ப்பவர்களும் சோதிக்கப்படுகின்றனர். இப்படி சின்னச் சின்ன குறைகளைத் தவிர, ரசிகர்கள் கொண்டாடப்படக்கூடிய படமாக இதை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநரான விருமாண்டி.

Share this story