நீங்கள் ஒரு முறை பாராட்டினால், அது நூறு முறை பாராட்டிய மாதிரி - ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி

rajini rishap

காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், நீங்கள் ஒரு முறை பாராட்டினால், அது நூறு முறை பாராட்டிய மாதிரி என இயக்குநர் ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான உள்ள நிலப் பிரச்சனையை மையமாக வைத்து உருவான திரைப்படம் ‘காந்தாரா’.  இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. வெறும் 16 கோடிக்கு எடுக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கு மேல் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், காந்தாராவை பாராட்டினார். இது குறித்து வெளியிடப்பட்ட பதிவில், இந்த படத்தில் தெரிந்ததை விட, தெரியாதததை இதைவிட சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. இப்படம் இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பு. ‘காந்தாரா’ எழுதி, இயக்கி, நடித்துள்ள ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுக்கள். படக்குழுவினருக்கு மனதார பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

rajini

இந்நிலையில் ‘காந்தாரா’ படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் ரஜினியிடம் ரிஷப் ஷெட்டி வாழ்த்து பெற்றார். அதன்பிறகு  ‘காந்தாரா’ படம் குறித்து பல்வேறு விஷயங்களை ரிஷப் ஷெட்டியிடம் ரஜினி கேட்டு தெரிந்துக்கொண்டார். 

இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் ஷெட்டி, நீங்கள் எங்களை ஒரு முறை புகழ்ந்தால், அது நூறு முறை புகழ்ந்த மாதிரி, நன்றி ரஜினிகாந்த் சார். எங்களின் காந்தார திரைப்படத்திற்கான உங்கள் பாராட்டுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.  

Share this story