அண்ணாத்த' படத்தை பார்த்த பின் ஏமாற்றமே மிஞ்சியது : நடிகை குஷ்பு அதிருப்தி
’அண்ணாத்த’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்த அதிருப்தியை நடிகை குஷ்பு வெளிப்படுத்தியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை குஷ்புவிடம் ஒரு படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டதுண்டா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்தியில் சில படங்களும், தென்னிந்தியாவில் சில படங்களும் இருப்பதாக கூறினார். அதில் ‘அண்ணாத்த’ படத்தை அவர் குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது: “‘அண்ணாத்த’ படத்தில் மீனாவும் நானும் நடித்தோம். நாங்கள் இருவரும் படத்தில் கதாநாயகிகளாக இருப்போம் என்று ஆரம்பத்தில் எங்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது. ரஜினி சாருக்கு ஜோடியாக வேறு யாரும் நடிக்க மாட்டார்கள் என்றும், நாங்கள் தான் படம் முழுக்க இருப்போம் என்றும் நம்பி அந்த படத்தை ஒப்புக் கொண்டேன்.
அது மிகவும் மகிழ்ச்சிகரமான, நகைச்சுவையான மற்றும் வேடிக்கையான கதாபாத்திரமாக இருந்தது. ஆனால், அந்த படம் போகப் போக ரஜினி சாருக்கு திடீரென ஒரு ஹீரோயின் ஒப்பந்தமானார். அதற்கென ஒரு கேரக்டர் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டது. நான் ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரமாக மாறியதை அப்போதுதான் உணர்ந்தேன். டப்பிங்கின் போது, படத்தைப் பார்த்த பிறகு, நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்” இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்தனர். இப்படம் கடந்த 2021 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.