‘துருவ நட்சத்திரம்’ வெளியாவதில் தாமதம் : கவுதம் மேனன் வேதனை

‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டு சமயத்தில் யாருமே உதவவில்லை என்று கவுதம் மேனன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் பல்வேறு பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது. பலமுறை வெளியீட்டுக்கு முயற்சித்தும் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. தற்போது மம்முட்டியை வைத்து மலையாள படமொன்றை இயக்கியுள்ளார். அப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது ‘துருவ நட்சத்திரம்’ வெளியீடு தொடர்பாக கவுதம் மேனன், “இங்கு உடனடியாக வந்து உதவி செய்வதற்கு யாருமே இல்லை. ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியீட்டில் பிரச்சினை இருக்கும் போது யாருமே என்னை அழைத்து பேசவில்லை. என்ன நடக்கிறது என்பதை கூட யாரும் அறிந்து கொள்ளவில்லை. இங்கு ஒரு படம் நன்றாக ஓடினால் ‘அய்யோ அப்படியா!’ என்று யோசிப்பாங்களே தவிர சந்தோஷப்பட மாட்டார்கள்.
தாணு சார் மட்டுமே அவ்வப்போது அழைத்து, “என்னாச்சு.. நான் யார்கிட்டயாவது பேசணுமா” என்று கேட்பார். லிங்குசாமி எனது நண்பர். அவரும் படம் பார்த்துவிட்டு வெளியீட்டுக்கு முயற்சி செய்தார். அவருக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது. நீங்கள் தயாரித்தது தான் பிரச்சினை என்கிறார்கள், முதலில் நான் இப்படத்தை தயாரிக்கவில்லை.
இப்படத்தை வெளியீட்டுக்கு எடுத்துக் கொண்டேன். சில ஸ்டூடியோக்களில் படத்தைப் போட்டுக் காட்டினேன். அவர்கள் திரையுலகில் விசாரிக்கும் போது, அப்படத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது என கூறிவிட்டார்கள். ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பு இருப்பதால் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறேன். வெளியீடு, டீஸர் என எது வந்தாலும் நல்ல எதிர்பார்ப்பு உருவாகிறது. தாணு, லிங்குசாமி தவிர ஒருத்தர் கூட திரையுலகில் இருந்து என்னிடம் இப்படம் பற்றி கேட்கக் கூடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.