படப்பிடிப்பில் காயம் ! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பிரபாஸ்!
நடிகர் பிரபாஸ் இப்போது தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்த ஹாரர் காமெடி படத்தின் படப்பிடிப்பில் அவர் காயமடைந்துள்ளார். சண்டைக் காட்சியில் நடிக்கும் போது காலில் பலத்த காயம் ஏற்பட்டு விபத்தில் சிக்கியுள்ளார். இதன் காரணமாக இவர் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அவர் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' ஜப்பானில் அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியாகிறது. அங்கு இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருந்தார். இந்த காயம் காரணமாக அவர் ஜப்பான் செல்லவில்லை. இதற்காக அந்நாட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகர் பிரபாஸ் அந்த செய்தியில், 'என் மீதும் எனது பணியின் மீதும் எப்போதும் அதிக அன்பைப் பொழிந்ததற்கு நன்றி. நான் நீண்ட நாட்களாக ஜப்பான் செல்ல ஆவலுடன் இருந்தேன். ஆனால், படப்பிடிப்பின் போது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதால், அங்கு செல்ல முடியாமல் போனதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 'கல்கி 2898 கி.பி' ஜனவரி 3-ம் தேதி ரிலீஸுக்குத் தயாராக உள்ளது என்று நடிகர் கூறினார். விரைவில் உங்களை சந்திப்போம் என்று நம்புகிறேன்.' என தெரிவித்துள்ளார்.