”சவாதீகா பாடலுக்கு அஜித் காய்ச்சலுடன் நடனமாடினார்” கல்யாண் மாஸ்டர் பாராட்டு !

ak

’விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார் காய்ச்சலுடன் நடனமாடியதாக நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் துணிவு திரைப்படம் வெளியானது.

இதனைத்தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. ’விடாமுயற்சி’ பயணம் தொடர்பான கதை என கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு அதிக நாட்கள் அசர்பைஜான் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அஜித்குமார் தனது மனைவி த்ரிஷாவுடன் நீண்ட சாலை பயணம் செல்லும் போது அவரை ஒரு சிலர் கடத்துகின்றனர். அந்த கடத்தல் கும்பலிடம் இருந்து த்ரிஷாவை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பது தான் கதை எனவும், ஹாலிவுட் படத்தின் ரீமேக் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் சவாதீகா பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி ட்ரெண்டானது. இதுகுறித்து விடாமுயற்சி படத்தின் ப்ரமோஷனில் நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் பேசுகையில், "நடிகர் அஜித்குமார் சவாதீகா பாடலுக்கு நடனமாடும் போது அவருக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது. அதனால் அவருக்கு இருமல் அதிகமாக இருந்தது. அஜித்திடம் நாங்கள் ஓய்வு எடுக்க சொன்ன போது அவர் மறுத்தார்.


இந்த பாடலுக்கு நடனமாட 40 டான்சர்கள் காத்திருக்கின்றனர். இவ்வளவு தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்காக காத்திருக்கக் கூடாது. எனக்கு அரை மணி நேரம் ஓய்வு கொடுங்கள் என கேட்டு விட்டு பிறகு வந்து நடனமாடினார்" என கூறியுள்ளார். விடாமுயற்சி பட ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ’விடாமுயற்சி’ டிரெய்லரை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

Share this story