‘சூர்யா 45’ இயக்கும் பொறுப்பு: ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி

‘சூர்யா 45’ படத்தினை இயக்கும் பொறுப்பு கிடைத்திருப்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 45’ திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது சூர்யாவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே ’பச்சை சட்டை’ என்ற பெயரில் ஆன்லைனில் PODCAST நிகழ்ச்சி ஒன்று செய்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அந்த நிகழ்ச்சியில் ‘சூர்யா 45’ குறித்து பேசியிருக்கிறார். அதில் “சூர்யா 45 என்ற படத்தினை உங்களிடம் சொல்லாமல் நேரடியாக சொன்னேன் என்பதில் இந்த நிகழ்ச்சியினை கேட்பவர்களுக்கு மன வருத்தம் இருந்திருக்கும். திங்கட்கிழமை காலை வரையே எனக்கு அன்றைய தினம் அறிவிப்பு இருக்கும் என்பது தெரியாது. அறிவிக்கலாமா, வேண்டாமா, பின்னர் அறிவிக்கலாமா என்ற குழப்பதிலேயே இருந்தது.
‘சூர்யா 45’ படத்தினை நான் தான் இயக்கப் போகிறேன். பல மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து நான் என் வேலையை செய்துக் கொண்டிருந்தேன். அப்படி செய்யும் போது கடவுள் இந்தாப்பா தம்பி என்று கருணையோடு ஏதேனும் கொடுப்பார். அப்படிக் கொடுத்ததை சரியாக செய்துவிட வேண்டும் என்று நானும், என் அணியினரும் உழைக்க ஆரம்பித்திருக்கிறோம். சரியாக ஒரு வேலையை செய்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள்.” என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.