ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய விஜய்
நவம்பர் 30ஆம் தேதி கரையை கடந்த ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை ஏற்பட்டு வெள்ளக்காடானது. குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாகத் திருவண்ணாமலையில் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது.
இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர். அதோடு தமிழ்நாடு அரசு சார்பில் உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 இலட்சம் மற்றும் சேதமடைந்த குடிசைகளுக்கு 10 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னதாக புயலால் உயிரழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய், தற்போது ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார். சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களைத் தேர்வு செய்து, குடும்பத்திற்கு ஒருவரை அழைத்து பனையூரிலுள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் கொடுத்துள்ளார். நிவாரண பொருட்களாக அரிசி, புடவை, மளிகை சாமான் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. விஜய் தற்போது அ.வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.