கதையே மாறிடுச்சு.. ’மழை பிடிக்காத மனிதன்’ பட இயக்குனர் விஜய் மில்டன் வேதனை ..!
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடித்த 'மழை பிடிக்காத மனிதன்' இன்று திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற 1 நிமிடக் காட்சியால் படமே சொதப்பி விட்டதாகவும், அந்த 1 நிமிட காட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே இந்த படம் சலீம் படத்தின் தொடர்ச்சி என்பதை காட்டியுள்ளனர். இந்நிலையில், அதுதான் இந்த படத்துக்கும் இந்த படத்தை இயக்கிய இயக்குநருக்கும் பிரச்சனையாக மாறியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கான காட்சி இன்று போடப்பட்ட நிலையில், இயக்குநர் விஜய் மில்டனுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி தனக்கே தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் நாயகன் யார்? அவன் ரவுடியா? போலீஸா? அவனுடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது என ட்விஸ்ட்டுகளை வைத்து படம் பண்ணியிருந்தேன். ஆனால், ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சியிலேயே அவன் யார் என்பதை ரிவீல் செய்து விட்டால் அதன் பின்னர், படத்தை எப்படி பார்க்க முடியும். இது யார் செய்த சதி என தெரியவில்லை எனக் குமுறியுள்ளார்.
அந்த ஒரு நிமிடக் காட்சியை மறந்து விட்டு படத்தை பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் மழை பிடிக்காத மனிதன் படம் பிடிக்கும் என ரசிகர்களுக்கு விஜய் மில்டன் கோரிக்கை வைத்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருப்பது இயக்குநருக்கே தெரியாது எனக் கூறுவதால் யார் படத்தின் கதையை மாற்றி எடிட் செய்தது என்றும் படம் வெளியாவதற்கு முன்னால் முழு படத்தையும் இயக்குநர் பார்க்கவில்லையா? சென்சார் ஆன பிறகு காட்சிகளை கூடுதலாக இணைத்து அப்படியே திரையிட முடியுமா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு விஜய் ஆண்டனி என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குனர் விஜய்மில்டனுக்கு இப்படி ஒரு அநீதியா?
— Valaipechu J Bismi (@jbismi_offl) August 2, 2024
@vijaymilton @vijayantony pic.twitter.com/IitVbE2FeY