இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறதா ஆஸ்கர் விருதுகள் ?

97-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 2-ம் தேதி வழக்கம் போல அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கடும் பாதிப்புக்குள்ளானது. ஏராளமான வீடுகள், நட்சத்திர ஹோட்டல்கள் தீக்கிரையாகின. இதனால் ஆஸ்கர் விருது இந்த ஆண்டு நடத்தப்படுமா என்று பலரும் சந்தேகம் எழுப்பி வந்தனர். அல்லது ஆஸ்கர் விழா வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், 96 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவை ரத்து செய்வது குறித்து ஏற்பாட்டாளர்கள் பரிசீலித்து வருவதாகவும், இதற்காக டாம் ஹாங்க்ஸ், எம்மா ஸ்டோன், மெரில் ஸ்ட்ரீப் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அடங்கிய குழு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க ஊடகமான ‘தி சன்’ தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு மாறாக, ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இணையதளம் இது தொடர்பாக பிரத்யேக கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்கர் விழா ரத்து செய்யப்படுவதாக வரும் தகவல்களில் துளியும் உண்மை இல்லையென்றும், ஆஸ்கர் அகாடமியில் இருக்கும் மூத்த உறுப்பினர்களிடம் பேசிய போது விழாவை ரத்து செய்வது அல்லது தள்ளிவைப்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், விழா குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் குறித்து ஆஸ்கர் கமிட்டி இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நகரின் வடக்கில் உருவான ஈட்டன் காட்டுத் தீ பாதிப்பில் சிக்கியவர்கள், இந்தக் காட்டுத் தீ 14,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பை ஏரித்துள்ளது. இதில் 35 சதவீதம் தீ, தீயணைப்பு வீரர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.