‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் 18 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரஷாந்த் – சிம்ரன் ஜோடி !

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் 18 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரஷாந்த் – சிம்ரன் ஜோடி !

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை சிம்ரன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடிப்பில் 2018-ல் வெளியான அந்தாதுன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்காக ஆயுஷ்மான் குரானா தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.


ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலே அதை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது சினிமா வழக்கம் தானே. அப்படி அந்தாதுன் படத்தில் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கினார். அதையடுத்து அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜேஜே பிரெட்ரிக் இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘அந்தாதூன்’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் 18 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரஷாந்த் – சிம்ரன் ஜோடி !

அந்தாதூன்’ ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறித்து சிம்ரன் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ‘அந்தாதூன்’. பல்வேறு பகுதி மக்களைச் சென்றடைந்தது. தபுவின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரஷாந்த்-சிம்ரன் இணைந்து ஜோடி கண்ணெதிரே தோன்றினால், தமிழ், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் என ஐந்து படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story