அஜித் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையா இருங்க: கார்த்திகேயா!

அஜித் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையா இருங்க: கார்த்திகேயா!

‘வலிமை’ படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையா இருங்க என தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்திகேயா.

சூப்பர் ஹிட் படமான ‘ஆர்.எக்ஸ். 100’ உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களில் ஹீரோவாக நடித்தவர் கார்த்திகேயா. அஜித்தின் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதான் அவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம்.

Kartikeya

கார்த்திகேயாவுக்கு நேற்று (செப்டம்பர் 21) பிறந்த நாள். அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி, ‘வலிமை’ படத்தில் நடிப்பதால் அஜித் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அஜித்துடன் கார்த்திகேயா இருப்பது போன்ற காமன் டிபியையும் வெளியிட்டு அமர்க்களப்படுத்தினர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த கார்த்திகேயா, அஜித் ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ‘என் பிறந்த நாளில் என்மீது அன்பைப் பொழிந்த அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றிகள். நான் கடுமையாக உழைத்து, உங்களை பெருமிதப்படச் செய்வேன் என உறுதியுடன் தெரிவிக்கிறேன்.

கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர்பார்த்தவிட சிறப்பான ஒரு அப்டேட் வரப்போகுது’ ட்விட்டர் பதிவில் கார்த்திகேயா தெரிவித்துள்ளார். #WaitingForThalaDharisanam என்ற ஹாஷ்டேக்கை அவர் பயன்படுத்தியிருப்பதால், ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையா இருங்க: கார்த்திகேயா!

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வலிமை’ படத்துக்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாவல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்ற தகவலை படக்குழு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Share this story