பாலிவுட் முன்னணி நடிகர் வித்யா பாலன் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் அரைகுறையாக நிறுத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷாவின் விருந்து அழைப்பை வித்யாபாலன் ஏற்க மறுத்ததால் இவ்வாறு நிகழ்ந்ததாக கூறப்பட்டது.
மேலும் அவர்களிடையே நடந்த அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு நாள் கழித்து, திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவின் வாகனங்கள் படப்பிடிப்புக்காக காட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு படக்குழு முழுவதுமாக பேக்அப் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த ஷா, தான் தான் இரவு உணவிற்கான கோரிக்கையை மறுத்ததாகக் கூறினார். “படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று சிலர் என்னை அழைத்ததால் நான் பாலாகாட்டிற்கு சென்றிருந்தேன், அவர்கள் என்னை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு அழைத்தனர். ஆனால், என்னால் இப்போது உணவில் கலந்துகொள்ள முடியாது என்றும் மகாராஷ்டிராவிற்கு செல்லும்போது அவர்களை சந்திப்பதாகவும் நான் அவர்களிடம் கூறினேன். ஆகையால், மதிய உணவு / இரவு உணவுதான் ரத்து செய்யப்பட்டதே தவிர படப்பிடிப்பு இல்லை” என்று அமைச்சர் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது வித்யாபாலனுக்கும் அமைச்சருக்கும் மட்டும் தான் தெரியும் !