காதலியை கரம்பிடித்த சர்வானந்த்... குவியும் வாழ்த்துக்கள் !
‘எங்கேயும் எப்போதும்’ நடிகர் சர்வானந்த் - ரக்ஷிதா திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தெலுங்கில் பிரபல நடிகராக உள்ள சர்வானந்த், ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். இந்த இரு படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் சேரன் இயக்கத்தில் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘கணம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே 39 வயதாகும் சர்வானந்த், நீண்ட நாட்களாக ரக்ஷிதா என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் சர்வானந்த் - ரக்ஷிதா திருமணம் இன்று ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பெற்றோர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பல சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரசிகர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சர்வானந்த் - ரக்ஷிதா பிரம்மாண்ட திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.