×

ஆஸ்கர் இசையமைப்பாளருக்கு பத்மஸ்ரீ விருது... குடியரசு தலைவர் வழங்கி சிறப்பித்தார் !

 

 ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் கௌரவித்தார். 

ஆண்டுத்தோறும் பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த 25-ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டது. 

இந்த பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷன், 9 பேருக்கு பத்ம பூஷன், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதில் தென்னிந்தியாவை சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம், பாம்புப் பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன், பரதநாட்டிய கலைஞர் கல்யாண சுந்தரம் பிள்ளை, மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 22-ஆம் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்ட விருதுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று விருதுகள் வழங்கப்பட்டது. அதில் பிரபல இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் அவருக்கு ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.