×

‘தி கேரளா ஸ்டோரி’.. எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல - சிம்பு பட நடிகை காட்டம் !

 

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் எந்த மதத்திற்கு எதிரானது அல்ல என நடிகை சித்தி இத்னானி தெரிவித்துள்ளார். 

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவை சேர்ந்த அப்பாவி பெண்கள் மூளைச்சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்‌. கேரளாவில் மட்டும் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இந்த படத்தின் கதை. 

இந்த படத்தில அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு மதத்தை குறித்து எடுக்கப்பட்ட படம் என்று இந்தியா முழுக்க இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு பல்வேறு அமைப்பு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு தடை செய்யவேண்டும் என்று போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து கீதாஞ்சலி மேனன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்தி இத்னானி, தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெறுப்பை உருவாக்க அல்ல. விழிப்புணர்வை உண்டாக்குவதற்குதான். எந்த மதத்திற்கும் இப்படம் எதிரானது அல்ல. மாறாக தீவிரவாதத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். இதற்கிடையே நடிகை சித்தி இத்னானி, சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.