ஜார்க்கண்ட் மாநில சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் பா. ரஞ்சித்!
இயக்குனர் பா ரஞ்சித் இந்தியில் அறிமுகமாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சினிமா எடுப்பதில் பெரும் புரட்சி செய்தவர் பா ரஞ்சித். அவரால் தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் பாலிவுட்டிலும் பா ரஞ்சித் களமிறங்க உள்ளார். பிர்சா என்ற இந்திப் படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளார். நமஹ் பிக்சர்ஸின் கீழ் ஷரீன் மந்திரி மற்றும் கிஷோர் அரோரா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்து நின்ற ஜார்கண்டின் பழங்குடித் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொன்டு இப்படம் உருவாக உள்ளது
பிர்சாவின் வாழ்க்கையைக் கண்டறிய ஜார்கண்ட் மற்றும் வங்காளத்தில் படக் குழு விரிவாகச் சுற்றுப்பயணம் செய்து, திரைக்கதைக்கான அமைத்துள்ளாராம்.
"இந்தப் படம் இதுவரை பார்த்திராத இடங்களில் விரிவாக படமாக்கப்பட்டு, பெரிய திரையில் பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் ஆழமான காடுகளுக்கு இதுவரை கண்டிராத வகையில் கொண்டு வரப்படும்" என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"எனது முதல் இந்தி அறிமுகத்திற்கு இதைவிட சிறந்த படம் இருக்க முடியாது. படத்தின் பின்னணியில் உள்ள ஸ்கிரிப்டிங் மற்றும் ஆராய்ச்சி செயல்முறை மிகவும் செழுமைப்படுத்தும் செயல்முறையாகும். பிர்சாவின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் மற்றும் சுயாட்சிக்கான அவரது நம்பிக்கையிலிருந்து நான் உத்வேகம் பெற்றுள்ளேன். மேலும் பெறவும் விரும்புகிறேன். ஆராய்ச்சி மற்றும் ஸ்கிரிப்ட் செய்யும் போது பொறுமையாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி" என்று பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.