நாளை படம் வெளியாக உள்ள நிலையில் கங்குபாய் படத்தின் பெயரை மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை!
ஆலியா பாட் நடிப்பில் உருவாகியுள்ள கங்குபாய் கதியாவாடி படத்தின் பெயரை மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
பாலிவுட் பிரபல நடிகை ஆலியா பாட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி திரைப்படம் வெளியாக உள்ளது. மும்பை காமாட்டிபுராவில் கோலோச்சிய கங்குபாய் கொத்தேவாலி என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை (பிப்ரவரி 25) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கங்குபாய் கதாபாத்திரத்தை இழிவான முறையில் காட்சிப்படுத்தியதாக நிஜ வாழ்க்கை கங்குபாயின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கங்குபாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா மற்றும் அவரது பேத்தி பாரதி இருவரும் 2020 முதல் படத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். கடந்த ஆண்டு மும்பை நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர். இது தொடர்பாக பன்சாலி மற்றும் ஆலியா பட் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.படத்தை வெளியிட தடை விதிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் தயாரிப்பாளர்கள் மீதான குற்றவியல் அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றம், படத்தின் பெயரை மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளது. அதற்கு தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் தனது மனுதாரரிடம் ஆலோசனை செய்துவிட்டு கூறுவதாக தெரிவித்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.