நயன்தாராவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.. செம்ம மாஸ் அப்டேட் !
ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடித்து வருகிறார். சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த படப்பிடிப்பில் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே 'விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.