சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை.. நீதிமன்றம் அதிரடி !
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழை அடைந்து முன்னணி நடிகராக வளர்ந்து வந்தார். கடந்த ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலை பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்த சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு தற்போது ‘நய்யே தி ஐஸ்டிஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சுஷாந்த் சிங்கின் கதாபாத்திரத்தில் ஜூபர் கான் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை திலீப் குலாட்டி இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 11-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை வெளியிடக் கூடாது என சுஷாந்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது படத்தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுஷாந்த் சிங் படத்தையோ, பெயரையோ, இந்த படத்தில் பயன்படுத்தவில்லை. அதேபோன்று சுஷாந்த் சிங்கின் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.