×

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை!

 

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கில் நடிகை ராதிகா ஆப்தே இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்த வருடத்தின் அதிக வரவேற்பு பெற்ற படமாக அப்படம் அமைந்தது. அந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். சஷிகாந்த் தயாரித்திருந்தார்.

விக்ரமாதித்யன் கதையில் வருவதைப் போல விஜய் சேதுபதி வேதாளமாகவும், மாதவன் விக்ரமாதித்யன் ஆகவும் நேர்த்தியாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மாதவனுக்கும் விஜய் சேதுபதிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது தான் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். 

விக்ரம் வேதாவுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து அப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் ஆமீர் கான் அப்படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் அப்படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் படத்தில் வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், விக்ரம் கதாபாத்திரத்தில் சயீப் அலிகானும் நடிக்க உள்ளனர். இந்தியிலும் புஷ்கர் காயத்ரி கூட்டணி தான் படத்தை இயக்கவுள்ளனர். 

தற்போது இந்தப் படத்தில் நடிகை ராதிகா ஆப்தே இணைந்துள்ளாராம். ஆம், விக்ரம் வேதா படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த ஆண்டு செப்டம்பர் 2022-ல் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.