×

கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த பாலிவுட் இயக்குனர்!

 

கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் சுனீல் தர்ஷன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சுனீல் தர்ஷன் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ என்ற படம் உருவாகியுள்ளது. இதுவே அவர் இயக்கத்தில் வெளியான கடைசிப் படமாகும். இப்படத்தில் ஷிவ் தர்ஷன், நடாஷா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ படம் யூடியூப் தளத்தில் சட்ட விரோதமாக பலரால் பதிவேற்றம் செய்யப்பட்டு பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் காப்புரிமை தன்னிடம் மட்டுமே இருப்பதாகவும் இதனால் தனக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இயக்குநர் சுனீல் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

தன் படத்தை யூடியூபில் இருந்து நீக்குமாறு அதிக முறை கோரிக்கை விடுத்தும் எந்த பதிலும் இல்லை. அதையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

"என்னுடைய ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ படத்தை நான் யூடியூபில் பதிவேற்றம் செய்யவில்லை. இதுவரை யாரிடமும் அப்படத்தை விற்கவுமில்லை. ஆனால் அப்படம் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. நான் தொடர்ந்து பலமுறை அப்படத்தை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. இதனால் நான் மிகவும் விரக்தியடைந்தேன். இதனால் எனக்கு நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக நீதிமன்றம் இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப் நிர்வாகத்தின் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.