அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படம்… கதாநாயகியாக நடிக்கும் தீபிகா படுகோன்!
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்தில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
கமர்சியல் படங்கள் எடுப்பதில் வித்தகர் அட்லீ. இவரது அனைத்து படங்களும் கமர்ஷியலாக வெற்றி பெற்றவை. இருந்தாலும் அட்லீ மீது தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் எழுப்பப்பட்டன. கூறிய பட்ஜெட்டை விட படத்தின் பட்ஜெட் பல மடங்கு தாறுமாறாக உயர்வதாக அட்லீ மீது புகார்கள் எழுந்தன. மேலும் அட்லீ படங்கள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்டவை என்ற விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வந்தன.
தமிழில் படம் எடுப்பதில் சிக்கல் அதிகமாகியதால் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினர் அட்லீ. சில மாதங்களுக்கு முன்பு அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை சந்தித்த செய்திகள் வெளியாகின. அதிலிருந்து அட்லீ ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார் என்ற செய்திகள் பரவின.
பின்னர் ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். அட்லீ-ஷாருக்கான் கூட்டணியை எதிர்பார்த்தவர்களுக்கு அது சற்று ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில், தற்போது ஷாருக்கான் ஊரடங்கிற்குப் பின்னர் ஒரே நேரத்தில் அட்லீ மற்றும் ராஜ்குமார் ஹிரானி இருவர் படங்களிலும் நடிப்பார் என்று கூறப்பட்டது.
தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்திற்கு ‘சங்கி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இந்த செய்தி உறுதியாகினால் ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் நான்காவது படம் இதுவாகும். ஓம்சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.
சங்கி படம் குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.