போதை மருந்து விவகாரம்: முன்னணி நடிகை வரவேற்பு!
பாலிவுட்டில் நடைபெற்று வரும் போதை மருந்து விசாரணைக்கு, நடிகை ரவீனா டாண்டன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை, பாலிவுட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வாரிசு அரசியல்தான் சுஷாந்த் மறைவுக்குக் காரணம் என்ற பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. கரண் ஜோஹர், அலியா பட் உள்ளிட்டோர் வாரிசு அரசியல் செய்வதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
குறிப்பாக, கங்கணா ரணாவத் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசி வருகிறார். இன்னொரு பக்கம், சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் என தொடங்கப்பட்ட போலீஸ் விசாரணை, இன்று போதைப்பொருள் விவகாரத்தில் வந்து நிற்கிறது. பல
முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. பாலிவுட்டில் இது சகஜம் என்ற அளவில் அங்கு போதை மருந்து பயன்பாடு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
போதை மருந்து விவகாரத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி, ரியாவின் சகோதரர் ஷெளவிக், சுஷாந்த் உதவியாளர் மற்றும் மேனேஜர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், தீபிகா படுகோன் மேனேஜரான கரிஷ்மா ப்ரகாஷின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுவதால், விசாரணைக்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நடிகைகள் சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத்சிங் ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இப்படி முன்னணி நடிகைகள் பலரது பெயர்கள் போதை மருந்து விவகாரத்தில் அடிபடும் நிலையில், ரவீனா டாண்டன் போதை மருந்து விசாரணைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘இதை சுத்தம் செய்வதற்கு இதுதான் சரியான நேரம். மிகவும் வரவேற்கிறேன். நம்முடைய இளம் மற்றும் எதிர்காலத் தலைமுறைக்கு இது உதவியாக இருக்கும். இங்கிருந்து தொடங்கி, எல்லாத் துறைகளிலும் எல்லா துறைகளிலும் இதைச் செய்யுங்கள். இதை வேரோடு பிடுங்கி எறியுங்கள். குற்றவாளிகளை, போதை மருந்து பயன்படுத்துபவர்களை, விற்பவர்களை/விநியோகிப்பவர்களை தண்டியுங்கள். பெரிய மனிதர்கள், கண்ணை மூடிக்கொண்டு மக்களை அழித்து லாபம் பார்க்கின்றனர்’ என தெரிவித்துள்ளார்.
இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ள ரவீனா டாண்டன், தமிழில் அர்ஜுன் ஜோடியாக ‘சாது’ என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.