நான் தென்னிந்திய படங்கள் பார்ப்பதில்லை... பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்!
தான் தென்னிந்திய படங்கள் பார்ப்பதில்லை என்று பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் பல தடைகளைக் கடந்து தன் கடின உழைப்பால் இன்று பெரிய நடிகராக உருவெடுத்திருப்பவர் நவாஸுதீன் சித்திக். தற்போது இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளார். படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்ற மிகவும் பிசியாக இருந்து வருகிறார் நவாஸுதீன்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.
"உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நான் தென்னிந்திய படங்கள் பார்ப்பதில்லை. நான் கமர்ஷியல் படங்கள் எதையும் பார்ப்பதில்லை. தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் படம் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் புஷ்பா, கேஜிஎஃப் 2 வெற்றி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. ஒரு படம் வெற்றி பெறும் போது, அடுத்து வரும் படங்கள் அனைத்தும் அந்த வெற்றிப்படத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். நாங்கள் அவ்வளவு வேகமாக தாக்கத்துக்குள்ளாகிறோம். சமீபத்தில் ஹிட்டான படத்தின் மொழி, வசனங்கள் மற்றும் அணுகுமுறைகளை பெறுகிறோம். இது எனக்கு பெரும் புதிராகவே இருக்கிறது.
இதில் நல்ல விசயம் என்னவென்றால், பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன வழங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கொடுப்பது நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அது முக்கியமானது. நானும் அப்படியான கமர்ஷியல் படங்களையே செய்கிறேன். ஆனால் அதுபோன்ற படங்களை பார்ப்பதில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஏன் இப்படி இருக்கிறது என்று இன்னும் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்து பலரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.