அமீர் கானின் லால் சிங் சத்தா... மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
1994-ம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹோலந் நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' . தற்போது அந்தப் படம் இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. அலபாமாவைச் சேர்ந்த அமைதியான புத்திசாலி ஆனால் இரக்கமுள்ள மனிதரின் வாழ்க்கையை விவரிப்பது தான் இந்தக் கதை. அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
'லால் சிங் சத்தா' படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட இருப்பதாக முன்னதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் படத்தின் ரிலீஸ் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாகப் பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் அனைத்து வேலைகளையும் முடிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 28ல் வெளியிட அமீர் யோசித்து வருவதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.