×

தள்ளிக் கொண்டே போகும் லால் சிங் சத்தா படத்தின் ரிலீஸ்... 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் செய்துள்ள உதவி!

 

'லால் சிங் சத்தா' திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

1994-ம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹோலந்த் நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' . தற்போது அந்தப் படம் இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட இருப்பதாக முன்னதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் படத்தின் ரிலீஸ் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தனர். அதையடுத்து படத்தின் அனைத்து வேலைகளையும் முடிக்க கால அவகாசம் தேவைப்படுவதால் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்தாண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி படத்தில் ரிலீசைத் தள்ளி வைத்தனர். 

இந்நிலையில் மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எங்கள் திரைப்படமான லால் சிங் சத்தா, திட்டமிட்டபடி ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகாது என்பதை அறிவிக்கவே இந்த அறிக்கை. இதற்குக் காரணம் படத்தை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போனதுதான். இப்படம் இப்போது 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. திரு.பூஷன் குமார், டி சீரிஸ், ஓம் ரவுத் மற்றும் ஆதிபுருஷின் முழு குழுவிற்கும் எங்கள் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11, 2022 அன்று வரக்கூடிய வகையில் பிரபாஸ், க்ரித்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தைத் தள்ளி வைத்து புரிந்துணர்வுடனும் இருந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்." என்று தெரிவித்துள்ளனர்.