‘லவ் டுடே’ இந்தி ரீமேக்கிற்காக களமிறங்கும் பாலிவுட் வாரிசுகள்... யார் அவர்கள் தெரியுமா ?
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்கில் முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கோமாளி‘ படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘லவ் டுடே’. 2K கிட்ஸ்களின் கதையம்சம் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமகால காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து இவானா, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெளியான இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இதையடுத்து இந்தியிலும் இப்படம் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் நடிக்கவுள்ளனர். அதன்படி நடிகர் அமீர்கானின் மூத்த மகன் ஜுனைத்தும், ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் நடிக்கவுள்ளனர். தமிழில் சூப்பர் ஹிட்டடித்த இந்த படத்தில் பாலிவுட் வாரிசுகள் நடிக்கவிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை பான்டோம் ஸ்டுடியோஸுடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.