டைகர் ஷ்ராப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரஹ்மான்!
நடிகர் ரஹ்மான் புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் தற்போது பணியாற்றி வரும் நடிகர் ரஹ்மான், விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் டைகர் ஷெராப் நடிப்பில் உருவாகி வரும் 'கணபத்' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக ரஹ்மான் மூன்று மாதங்கள் இந்தி மொழி பயின்றதாகவும் கூறப்படுகிறது. விரிவான ஸ்கிரிப்ட் வாசிப்பு மற்றும் மேக்கப் சோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதைவிட எனக்கு இந்தியில் சிறந்த அறிமுகம் கிடைத்திருக்க முடியாது என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
"கணபத் படக்குழுவினர் என்னை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள், டைகர் மற்றும் க்ரிதியுடன் பணிபுரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது. வழக்கமான வதந்திகளுக்கு மாறாக, செட்களில் மொழியின் அடிப்படையில் பாரபட்சம் எதுவும் இல்லை. நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து படப்பிடிப்பில் மகிழ்ச்சியாக இருந்தோம்." என்று தெரிவித்துள்ளார்.
ரஹ்மான் கணபத் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தவிர, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் , விஷாலின் துப்பறிவாளன் 2 மற்றும் ஜெயம் ரவியின் ஜன கண மன ஆகிய படங்களிலும் ரஹ்மான் நடித்து வருகிறார்.