'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!
'ராட்சசன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
2018-ம் ஆண்டு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்தார். விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ராட்சசன். இந்தியாவின் மிகச்சிறந்த சைக்கோ திரில்லர் படங்களில் ராட்சசனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.
அதையடுத்து பெல்லம்கொண்டா சீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ராட்சசன் தெலுங்கிலும் ரீமேக் ஆகி ஹிட் ஆனது. தற்போது ராட்சசன் இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்ஷய் குமார், ராட்சசன் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. அந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமைகளை அக்ஷய் குமார் வாங்கியிருப்பதாகவும் தன்னுடைய சொந்த பேனர் தயாரிப்பின் கீழ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரமேஷ் வர்மா என்ற இயக்குனர் ராட்சசன் ஹிந்தி ரீமேக்கை இயக்க உள்ளாராம்.
தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாறன் லண்டனில் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகுல் ஏற்கனவே நான்கு பாலிவுட் படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.