மோசடி நபருடன் தொடர்பு...வெளிநாடு செல்ல இருந்த பாலிவுட் நடிகை தடுத்து நிறுத்தம்!
200 கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக வெளிநாடு செல்ல இருந்த நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பெரும் தொழிலதிபர்களிடம் 200 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சென்றிருந்தார். அங்கு அவரை அமலாக்கத் துறையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அதையடுத்து தொடர்ந்து அவரை டெல்லி அழைத்துச் சென்று அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுகேஷ் ஜாக்குலினுக்கு 9 லட்சம் மதிப்புள்ள பெர்சிய பூனை ஒன்றை பரிசாக அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 50 லட்சம் மதிப்புள்ள குதிரை, தங்க நகைகள் உட்பட 10 கோடிக்கும் அதிகமாக அன்பளிப்புகள் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடுதல் விசாரணைகளில் இன்னும் பல விவரங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.