×

மோகன்லாலின் தரமான செய்கை… சிறப்பான இரண்டாம் பாகம்… த்ரிஷ்யம் 2 விமர்சனம்!

‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் நேற்று இரவு 11 மணி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. 2013-ம் ஆண்டு மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்தியாவின் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்தது. ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மகன் கொலை வழக்கிலிருந்து தன் குடும்பத்தைக் காக்க போராடும் ஒரு சாதாரண மனிதனின் அசாத்தியான மதிநுட்பம் பார்வையாளர்களை சீட்
 

‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் நேற்று இரவு 11 மணி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

2013-ம் ஆண்டு மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்தியாவின் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் ஹிட் அடித்தது.

ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மகன் கொலை வழக்கிலிருந்து தன் குடும்பத்தைக் காக்க போராடும் ஒரு சாதாரண மனிதனின் அசாத்தியான மதிநுட்பம் பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைத்தது. ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பை அதிகரிக்கச் செய்தது. இறுதி வரை அந்த விறுவிறுப்புடன் நகர்ந்து வெற்றியும் பெற்றது.

தற்போது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுத தனக்கு ஐந்து வருடங்கள் ஆனதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியிருந்தார். அதற்கு ஏற்றவாறு மிகவும் விறுவிறுப்பான இரண்டாம் பாகத்தைக் கொடுத்து அந்த காலத்தை சமன் செய்துள்ளார்.

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போலீஸ் ஸ்டேஷனலிருந்து கையில் ஒரு மண்வெட்டியுடன் மோகன்லால் வெளியே வருவதாக படம் தொடங்குகிறது. பின்னர் 6 வருடங்களுக்குப் பிறகு கதை தொடங்குகிறது. முதல் பாகத்தில் போலீசாரால் மோகன்லால் குடும்பம் துன்புறுத்தப்படுவதைப் பார்த்து அந்த ஊர் மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக நிற்பர். அதுவே இரண்டாம் பாகத்தில் மோகன்லால் தான் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று தீர்க்கமாக நம்பும் அளவிற்கு ஊர் மக்கள் மாறியிருப்பர். மேலும் மோகன்லால் வசதி படைத்தவராக மாறியதைப் பார்த்து ஊர்மக்கள் பொறாமைப்படுகின்றனர்.

ஆரம்பத்தில் கதை சிறிது மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக அதன் ஓட்டத்தில் வேகத்தை அதிகரிக்கிறது. சில கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் ஏன் தேவையில்லாமல் வந்து போகிறது என்று முதலில் நினைத்தாலும் இறுதியில் எல்லாவற்றிற்குமான காரணத்தைக் கொடுத்துள்ளனர்.

கொலை வழக்கு மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கப்பட்டதும் மோகன்லால் குடும்பத்தினர் மீண்டும் மீளமுடியா அச்சத்திற்கு உள்ளாகும் போது மோகன்லால் அசாத்திய தைரியத்துடன் நிற்பது நமக்கும் அதே தைரியத்தைக் கொடுக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக நகர, இரண்டாம் பாகம் முழுவேகத்தில் முன்னேறுகிறது.

கொலை செய்யப்பட்ட அந்த பையனின் பெற்றோர் போலீசில் உயர் அதிகாரிகள் என்பதால் சாகும் வரை தங்கள் குடும்பத்தை விடமாட்டார்கள் என்பது மோகன்லாலுக்கு நன்றாகத் தெரியும். எனவே தனது குடும்பத்தை எந்த சூழ்நிலையிலும் விடாமல் காப்பேன் என்று தீர்க்கமான உறுதியுடன் நிற்கும் மோகன்லால் மீண்டும் எப்படி தன் குடும்பத்தை இந்த பேராபதிலிருந்து காப்பாற்றப்போகிறார் என்ற கேள்விக்கு பதிலை படத்தின் இறுதி வரை மிகவும் சுவாரசியமான முறையில் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் தான் அந்த பையனின் உடல் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவ்வளவு தானா மோகன்லால் சிறைக்கு செல்லப்போகிறாரா? என்ற பயத்தை ஏற்படுத்திவிட்டனர்.

பின்னர் கிளைமேக்சில் முதல் பாகத்தில் ஏற்படுத்திய அதே புல்லரிப்பை ஏற்படுத்துகிறார் மோகன்லால்.

படத்தின் சிறு சிறு கதாபாத்திரங்கள் கொண்டும் மோகன்லால் குடும்பம் சிக்கிக் கொள்ளப்போகிறது என்ற பயத்தை படத்தின் இறுதி வரை உணர வைத்துவிட்டார் இயக்குனர். இறுதியில் ஒரு சாதரண மனிதனால் இந்தளவுக்கு அறிவுப்பூர்வமாக சிந்திக்க முடியுமா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்திவிட்டார் இயக்குனர்.

இன்னும் எந்த எல்லைக்கும் நீங்கள் சென்றாலும் அதற்கு எப்போதும் ஒரு படி மேல் போய் என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்ற தீர்க்கமான உறுதியுடன் நம் முன் நிற்கிறார் மோகன்லால். போலீஸ்காரர்கள் மோகன்லாலைப் பின்தொடரவில்லை, அவர் தான் போலீஸ்காரர்களைப் பின் தொடர்ந்து வருகிறார் என்ற காட்சிப்படுத்தல் மிகச்சிறப்பாக இருந்தது.

நடிப்பைப் பற்றித் தனியாக சொல்லவேண்டியதில்லை. அனைவரும் சிறப்பானா நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். பாடல்கள், சண்டைக்காட்சிகள் இருந்தால் தான் படம் சுவாரசியமாக இருக்கும் என்பதை உடைத்து சுவாரசியமான திரைக்கதை இருந்தாலே போதும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

இதுவரை வெளியாகிய பல இரண்டாம் பாகங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தான் தழுவியுள்ளன. முதல் பாகத்தில் ஏற்படுத்திய அதே உணர்வை தரத் தவறுவதாலே அந்தப் படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. அந்த விஷயத்தில் த்ரிஷ்யம் 2 ஜெயித்துக் காட்டியிருக்கிறது. இந்த வருடத்தின் தரமான இரண்டாம் பாகம் என்று த்ரிஷ்யம் 2 படத்தைக் கூறலாம். அவசியம் பாருங்கள்!