அத்துமீறிய முக்கிய இயக்குநர் - பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு
மலையாளத் திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலையாள திரைத்துறையின் பெண்கள் அமைப்பினர் அம்மாநில முதல்வருக்கு மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.
பின்பு 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் “நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருகிறது. பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கே பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்” என பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். பெங்காலியில் ஏராளமான படங்களில் நடித்து அங்கு பிரபலமானவர் ஸ்ரீலேகா மித்ரா. அவர் கூறுகையில், “2009ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பாலேரி மாணிக்யம்’ படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. அதற்காக கேரள வந்த போது, படத்தின் இயக்குநர் ரஞ்சித் கதாபாத்திரம் மற்றும் சம்பளம் குறித்து பேசலாம் என அவரது ஹோட்டல் அரைக்கு அழைத்தார். அப்போது என்னுடைய கையின் வளையில் மீது கைவைத்ததோடு தலையின் முடியையும் தடவி அத்துமீற முயன்றார். இதனால் உடனே நான் ஹோட்டலை விட்டு வெளியேறிவிட்டேன். இந்த சம்பவத்தின் போது படத்தின் தயாரிப்பாளரும் இருந்தார். பின்பு அந்த படத்தில் நடிக்காமல் நான் வெளியேறிவிட்டேன். இந்த சம்பவம் தொடர்பாக அப்போது மலையாள சினிமாவில் முக்கியமாக இருந்தவர்களிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.
ஏற்கனவே ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள சினிமாவை உலுக்கி வரும் நிலையில் தற்போது பெங்காலி நடிகை கூறியிருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து இயக்குநர் ரஞ்சித் தற்போது ஸ்ரீலேகா மித்ராவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பாலேரி மாணிக்யம் படத்திற்காக ஆடிஷனுக்குத் தான் அவர் அழைக்கப்பட்டார். நடிப்பதற்கு இல்லை. இப்போது அவர் என் மீது குற்றம் சுமத்தப்பட்டது வேறொரு உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே எதிர்கொள்வேன்” என்றார். மலையாளத்தில் கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியாகியுள்ள மனோதரங்கள் ஆந்தாலஜி வெப் தொடரில் ரஞ்சித் ஒரு பகுதியை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.