×

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ரிலீஸ் தள்ளிவைப்பு - ‘தரத்தை மேம்படுத்த கால தாமதம்’
 

 

 செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தரத்தை மேம்படுத்தும் பணிகள் காரணமாக தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: “லக்கி பாஸ்கர் படத்தின் மீதான உங்களின் எதிர்பார்ப்பு எங்களுக்கு புரிகிறது. எந்த வித சமரசமும் செய்யாமல் துல்கர் சல்மான் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். 80, 90 காலகட்டத்தை தத்ரூபமாக உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதேநேரம் மற்ற மொழிகளின் டப்பிங் தரம் எந்த வகையிலும் குறைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எல்லா மொழிகளிலும் உண்மையான களத்தின் உணர்வை பார்வையாளர்கள் பெற விரும்புகிறோம். இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது ‘கிங் ஆஃப் கோதா’. எதிர்மறை விமர்சனங்களால் படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

‘லக்கி பாஸ்கர்’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 1980 களின் பிற்பகுதியில் 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கிறது இப்படம். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.