பெண்மை போற்றிய பெரும் கலைஞர் கே.பாலச்சந்தர் பிறந்த தின சிறப்புப் பதிவு !
பெண்மை போற்றிய கலைஞர்
பெண்ணுரிமை பேசும் நாயகிகளையும், உறவுகளின் விநோதங்களையும் காட்சிப்படுத்தியதன் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பிறந்த நாள் இன்று. பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் தோன்றி, நாடக உலகில் புகுந்து, பிறகு சினிமா உலகிற்கு வந்தார்.
நாகேஷ்,கமல்ஹாசன், ரஜினிகாந்த், எஸ்வி சேகர், ஒய்ஜி மகேந்திரன், மௌலி, ராதாரவி, பிரகாஷ்ராஜ், விவேக் என இயக்குநர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தி உச்சத்தைத் தொட்ட நட்சத்திரங்கள் நிறைய நடிகர்கள்! எம்.ஜி.ஆர்., சிவாஜி உச்சத்திலிருந்த காலத்திலும், ரஜினி, கமல் உச்சத்தைத் தொட்ட பிறகும் அவர்களை நம்பாமல் கதைகளை நம்பியும், புதுமுகங்களை அறிமுகப்படுத்தியும் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பாலச்சந்தர்.
தீரா நாடகக் காதல்
கைலாசம் பாலசந்தர் என்ற இயற்பெயர் கொண்ட பாலசந்தர், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட நல்லமாங்குடி கிராமத்தில் 1930-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தார். படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்ததுடன் நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நண்பர்களை வைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையிலேயே நாடகங்கள் நடத்துவார்.
அந்த கிராமத்தின் திண்ணைகளில் தான் நாடகங்கள் ஆரம்பமானது. கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அவரது தந்தைக்கு கே.பாலசந்தரை மாவட்ட ஆட்சியராக ஆக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இவரோ வீட்டுத் திண்ணையில் பள்ளிப் பருவத்திலேயே நாடகங்களை அரங்கேற்ற ஆரம்பித்தார். தந்தையின் வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.சி படிப்பை கற்க சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்கும் போதும் நாடக ஆசை தொடர்ந்தது. அவரே கதை -வசனம் எழுதி, முக்கிய வேடங்களில் நடிப்பது வழக்கம்.
கல்லூரி நாடகம்
கல்லூரியில் ஹாஸ்டல் தினம், பட்டமளிப்பு விழா என்றெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பாலசந்தரின் நாடகம் நிச்சயம் இடம் பெறும். கல்லூரி படிப்பை முடித்த பாலசந்தர் முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராக ஓர் ஆண்டு பணியாற்றினார். அங்கேயும் சட்டசபை எப்படி நடக்கிறது, பாராளுமன்றம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கும் வகையில், “மாதிரி சட்டசபை”, “மாதிரி பாராளுமன்றம்” ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி, பாராட்டு பெற்றார்.
அதன்பிறகு, சென்னை தேனாம்பேட்டையில் இருந்த ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் 1950 ஆம் ஆண்டு கணக்கராகப் பணிக்குச் சேர்ந்தார். அலுவலகப் பணிபோக மீத நேரங்களில் நாடகங்கள் மீது கவனம் செலுத்தினார். ரத்தத்தில் ஊறிய நாடக ஆசை அப்போதும் தொடர்ந்தது.
மாலை ஐந்து மணி ஆனதும், அதிகாரிகளும், ஊழியர்களும் அவரவர் வீட்டுக்கு கிளம்புவார்கள். பாலசந்தரோ, ராஜா அண்ணாமலை மன்றம் அல்லது ஆர்.ஆர்.சபாவுக்குப் போவார். “இன்று என்ன நாடகம்? நாளை என்ன நாடகம்? யார் -யார் நடிக்கிறார்கள்?” என்று அறிவிப்பு பலகைகளைப் பார்ப்பார். முக்கிய நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்த்து விடுவார். அந்தக் காலக்கட்டத்தில், பாலசந்தருக்கு நாடகம் மீதுதான் ஆசை இருந்ததே தவிர, சினிமாவை லட்சியமாகக் கொள்ளவில்லை.
ஏ.ஜி.அலுவலகத்தில் ஒரு விழா. மேல் அதிகாரியை பாலசந்தர் சந்தித்து, “இந்த விழாவில் நாடகம் நடத்தலாம். நாடகம் நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு” என்று கூறினார். அதற்கு அதிகாரி அனுமதியளிக்க உடனே நாடகத்தைத் தயாரிக்கத் தொடங்கினார், பாலசந்தர்.
முதல் நாடகம்
சென்னையில் அவர் முதன் முதலாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் “சினிமா விசிறி.” எப்போதும் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர்தான் இந்த நாடகத்தின் கதாநாயகன். இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிப்பு அனைத்தும் பாலசந்தர்தான்.
நாடகத்தைப் பார்த்தவர்கள், பாலசந்தரின் திறமையை வானளாவப் புகழ்ந்தார்கள்.(இந்த நாடகம்தான் பிற்காலத்தில் “எதிர்நீச்சல்” என்ற பெயரில் படமாகியது. சினிமா பித்து கொண்ட கதாநாயகனை, பட்டுமாமி என்ற பெயரில் கதாநாயகியாக மாற்றினார், பாலசந்தர்.)
“சினிமா விசிறி” நாடகத்தைப் பார்த்த சினிமா நடிகர் வி.கோபாலகிருஷ்ணன், பாலசந்தரை பார்க்க வந்தார். அவர் தனியாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார். “சினிமா விசிறி நாடகத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிரமாதம். என்னுடைய நாடகம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும்” என்று பாலசந்தரிடம் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். அதற்கு பாலசந்தர் சம்மதித்தார். கோபாலகிருஷ்ணனின் “உயிருள்ளளவும்” என்ற நாடகத்தில் நடித்தார். அப்போது பாலசந்தருக்கு வயது 21. நடித்தது அப்பா வேடத்தில்!
வயதான தோற்றத்தில் அற்புதமாக நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதைத்தொடர்ந்து, வி.எஸ்.ராகவன் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலசந்தரை தேடி வந்தது. வெளி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலசந்தர் சொந்தமாக “ராகினி ரிக்ரியேஷன்ஸ்” என்ற பெயரில் நாடகக்குழு அமைத்தார். நாடகம் நடத்த சபாக்களை மட்டும் நம்பியிராமல், திருமண வீடுகளிலும், மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் நடத்தி வந்தார்.
அப்படி ஒரு திருமண வீட்டில் அவர் நடத்திய நாடகத்தின் பெயர் புஷ்பலதா. “புஷ்பா”, “லதா” என்ற இரண்டு பெண்களைப் பற்றி மூன்று கல்லூரி மாணவர்கள் அடிக்கும் அரட்டைதான் நாடகம். கடைசிவரை புஷ்பாவோ, லதாவோ வரமாட்டார்கள்! பாலசந்தரின் இந்த புதுமை நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.
புதுமைக் கலைஞன்
ஏ.ஜி.ஆபீஸ் உயர் அதிகாரி மாற்றலாகிச் செல்லும்போது, பிரிவு உபசார விழாவில் பாலசந்தர் நடத்திய நாடகம் “மேஜர் சந்திரகாந்த்” இந்த நாடகத்தை நடத்தும்போது, ஒரு புதுமையைப் புகுத்தினார். மேடைக்கு திரை கிடையாது. மூன்று பக்கமும் திறந்தவெளி! நடிகர்கள் பார்வையாளர்களுடன் அமர்ந்து இருப்பார்கள். நடிக்க வேண்டிய கட்டம் வரும்போது, கூட்டத்தில் இருந்து எழுந்து வந்து நடித்து விட்டுப் போவார்கள்! நாடகத்தில் மேஜர் சந்திரகாந்த் வேடத்தில் பாலசந்தர் நடித்தார். இந்த நாடகம், அவருக்கு மேலும் புகழ் தேடித்தந்தது.
ஏ.ஜி.ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே 1956 மே 13-ந்தேதி பாலசந்தருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராஜம். பின்னர் “ராகினி ரிக்ரியேஷன்ஸ்’ என்ற பெயரில் சென்னை, திருவல்லிக்கேணியில் நாடகக் குழுவைத் தொடங்கினார். தொடர்ந்து, அவர் அரங்கேற்றிய “எதிர்நீச்சல்’, “நாணல்’, “விநோத ஒப்பந்தம்’ போன்ற நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்த நாடகங்களின் மூலம் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நடிகர்கள் வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தனர்.
சினிமா என்ட்ரி
எம்.ஜி.ஆர். நடித்த “தெய்வத்தாய்’ படத்தின் மூலம் மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார் பாலசந்தர். அப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதன் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, “பூஜைக்கு வந்த மலரே’ ஏவி.எம்.மின் “சர்வர் சுந்தரம்’, சிவாஜிகணேசன் நடித்த “நீலவானம்’ ஆகிய படங்களுக்குக் கதை, வசனம் எழுதினார்.
1965-ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி’ இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். இந்தப் படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து வெளிவந்த “நாணல்’, நாகேஷ், ஜெயலலிதா நடித்த “மேஜர் சந்திரகாந்த்’ ஆகிய இரு படங்களும் பாலசந்தருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. “மேஜர் சந்திரகாந்த்’ படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் அப்படத்துக்குப் பின் மேஜர் சுந்தர்ராஜன் என்றழைக்கப்பட்டார்.
எதிர்நீச்சல்
சமூக இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூக பிரச்னைகள் போன்றவை முக்கியக் கருப்பொருள்களாய் இருந்தன. நாகேஷ், முத்துராமன் நடிப்பில் வந்த “எதிர்நீச்சல்’, ஜெமினி நடிப்பில் வெளிவந்த “இருகோடுகள்’, முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவான “பாமா விஜயம்’, காந்தியக் கொள்கைகளின்படி வாழ முடியுமா என்பதைக் கருவாகக் கொண்டு உருவான “புன்னகை’, கமல், ஷோபா, சரத்பாபு, சுமித்ரா நடிப்பில் வெளிவந்த “நிழல் நிஜமாகிறது’, கமல், ஸ்ரீவித்யா, ஜெயசுதா நடித்த “அபூர்வ ராகங்கள்’ என இவரின் தொடக்க கால படங்கள் சிறந்த கதை அம்சமுள்ள படங்களாகத் தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்தன.
1975-ஆம் ஆண்டு வெளிவந்த “அபூர்வ ராகங்கள்’ படத்தின் முலம் நடிகர் ரஜினிகாந்த் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். நடிகர் திலகம்சிவாஜியை வைத்து பாலசந்தர் இயக்கிய ஒரே படம் “எதிரொலி’. கமல், பிரமீளா நடிப்பில் வெளிவந்த “அரங்கேற்றம்’ அந்தக் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
சுஜாதா கதாநாயகியாக அறிமுகமான “அவள் ஒரு தொடர்கதை’, ரஜினிகாந்த், சரிதா நடித்த “தப்பு தாளங்கள்’, மாதவி நடித்த “இவள் ஒரு கண்ணகி’ உள்ளிட்ட படங்கள் சமூக பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகின.
“அவள் ஒரு தொடர்கதை’, “தில்லுமுல்லு’, “நினைத்தாலே இனிக்கும்’, “வறுமையின் நிறம் சிகப்பு’, “உன்னால் முடியும் தம்பி’, “சிந்து பைரவி’, “புது புது அர்த்தங்கள்’, “வானமே எல்லை’ போன்ற ஏராளமான சிறந்த படங்களை இவர் இயக்கியுள்ளார்.
தெலுங்கில் கமல், சரிதா அறிமுகமான “மரோ சரித்ரா’ திரைப்பட வரலாற்றில் கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. பின்னர், இதே படம் கமல், ரதி நடிக்க கே.பி. இயக்கத்தில் “ஏக் தூஜே கேலியே’ என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் சரித்திரம் படைத்தது.
கவிதாலயா என்னும் தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் பிற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பல வெற்றித் திரைப்படங்களை அளித்துள்ளார்.
தமது இயக்கத்தில் பாலசந்தர் அதிகமாக பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினிகணேசன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், கமல்ஹாசன், முத்துராமன் நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சினிமா கடல் கடந்த இயக்குனர்
வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலசந்தர் அனுபவித்தது உண்டு. இவர் முதன் முதலில் இயக்கிய வண்ணப் படமான “நான்கு சுவர்கள்’ தோல்வி அடைந்தது. அதே கால கட்டத்தில் அவரது “நூற்றுக்கு நூறு’ வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் பெற்றது.
“தண்ணீர் தண்ணீர்’, “அச்சமில்லை அச்சமில்லை’, ஆகிய படங்கள் அரசியல், சமூக நெருக்கடிகளைப் பேசிய படங்களாக அமைந்தன. “தண்ணீர் தண்ணீர்’ கோமல் சுவாமிநாதனின் நாடகத்திலிருந்து உருவானது.
“அவர்கள்’, “புன்னகை மன்னன்’, “தில்லு முல்லு’, “அவள் ஒரு தொடர்கதை’, “அபூர்வ ராகங்கள்’ உள்பட இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் “பொய்’. கமல் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கிய “உத்தம வில்லன்’ படத்தில் நடித்திருக்கிறார் பாலசந்தர். இந்தப் படத்தில் திரைப்பட இயக்குநராகவே அவருக்கு வேடமளித்தார் கமல்ஹாசன்.
ஸ்டார் மேக்கர்
தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர்.
இதில் நடிகர் நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாது, அவரது நண்பருமாக இருந்தவர். நடிகையரில், சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம். ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க கால மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை அதிகமாக பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.
பாலச்சந்தர், வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து, 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர், இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களே நடித்திருந்த பட்டினப் பிரவேசம், அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை. பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.
துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் மற்றும் பிற்காலத்தில் இவர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம் இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது), பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
பல ஆண்டுகளுக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பல துறைகளிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்பட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் உட்பட பல நடிகர்கள் இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.
இயக்குனர் சிகரம்
நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருந்தாலும் எம்.ஜி.ஆரை, பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் எழுதியிருந்தார். தெய்வத்தாய் என்னும் அத்திரைப்படம், ஆர். எம். வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி. மாதவன், எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே, என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலச்சந்தரின் இயக்கத்தில், சிந்து பைரவி படத்தில், தமது பாத்திரத்திற்காக சுஹாசினி, இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது. சிரஞ்சீவியின் நடிப்பில், தெலுங்கில், பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியையும், பாராட்டுகளையும் பெற்றது.
கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும். பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும். பாலச்சந்தரின் இயக்கத்தில், ஜெயலலிதா நடித்த ஒரே படம் ‘மேஜர் சந்திரகாந்த்’.
ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில், பாலச்சந்தர் இயக்கிய
நான் அவனில்லை, திரைப்படம் அதன் புதுமையான கதையம்சத்திற்காக பெரிதளவில் பாராட்டைப்பெற்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன், ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
பாலசந்தர் இயக்கிய படங்களில்
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்!
நூல் வேலி
நீர்க்குமிழி
நாணல்
மேஜர் சந்திரகாந்த்
இரு கோடுகள்
பூவா தலையா
பாமா விஜயம்
தாமரை நெஞ்சம்
நான் அவனில்லை
நூற்றுக்கு நூறு
புன்னகை
எதிர் நீச்சல்
அபூர்வ ராகங்கள்
சிந்து பைரவி
சொல்லத்தான் நினைக்கிறேன்
ஒரு வீடு இரு வாசல்
ஜாதி மல்லி
அக்னிசாட்சி
கல்கி
வானமே எல்லை
புன்னகை மன்னன்
தில்லுமுல்லு
கல்யாண அகதிகள்
தண்ணீர் தண்ணீர்
அச்சமில்லை அச்சமில்லை
வறுமையின் நிறம் சிகப்பு
உன்னால் முடியும் தம்பி
புதுப்புது அர்த்தங்கள்
பார்த்தாலே பரவசம்
டூயட்
பொய்
பாலசந்தர் இயக்கிய பிற மொழித் திரைப்படங்கள்!
அந்துலெனி கதா (1976) – (தெலுங்கு)
ஆய்ணா (1977) – (இந்தி)
மரோசரித்ரா (1978) – (தெலுங்கு)
குப்பெடு மனசு (1979) – (தெலுங்கு)
இதி கத காடு (1979) – (தெலுங்கு)
ஏக் தூஜே கே லியே – (இந்தி) – (1981)
ஜரா சி ஜிந்தகி (1983) – (இந்தி) வறுமையின் நிறம் சிகப்பு படத்தின் மறு உருவாக்கம்.
ஏக் நயீ பஹேலி (1984) – (இந்தி) (அபூர்வ ராகங்கள் படத்தின் மறு உருவாக்கம்).
ருத்ரவீணா(1998) – (தெலுங்கு)
90-களுக்குப் பிறகு “கையளவு மனசு’ போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். தமிழ் சின்னத்திரையில் மெகா தொடர்களுக்கு முன்னோடி என்ற பெருமையும் பாலசந்தரை சாரும்.
இவருடைய மகன் கைலாசத்தின் மேற்பார்வையில் உருவான
மின்பிம்பங்கள் நிறுவனமே
இன்றைய தனியார் தொலைக்காட்சி
தொடர்களுக்கு அச்சாரம்.
இயக்குனர் பாலச்சந்தர் பெற்ற
விருதுகள்
1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது,
2010 ஆம் ஆண்டு
மத்திய அரசின் “தாதாசாகெப் பால்கே” விருது,
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாலசந்தர் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார்.
-Shivakkumar TD