25 படங்களில் நிராகரித்தார்கள்: ராஷ்மிகா மந்தனா உருக்கம்...
நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, தனுஷுடன் ‘குபேரா’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திரைப்படத் துறையில் பல நிராகரிப்புகளைச் சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "ஆரம்ப காலத்தில் நடிகைக்கான முகம் எனக்கு இல்லை என்று நிராகரித்தார்கள். ஆடிஷன் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது கண்ணீருடன் தான் வருவேன். 20, 25 படங்களுக்கான ஆடிஷன்களில் நிராகரிக்கப் பட்டிருக்கிறேன். இருந்தாலும் தொடர்ந்து முயன்றேன். ஒரு படத்துக்கான ஆடிஷனுக்கு பலமுறை சென்றேன். கடைசியாகவே தேர்வு செய்தார்கள்.
3 மாதங்கள் பயிற்சி நடந்தும் படம் நின்றுவிட்டது. பிறகு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் நடித்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது, ‘இதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்’ என்றும் தோன்றும்” என்று தெரிவித்துள்ளார்.