"கிரிக்கெட் எனது மிகப்பெரிய பலம்!" - தனது பயோபிக் குறித்து யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாக இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். 2011 உலகக்கோப்பையில் ஆல்ரவுண்டராக மிகச் சிறப்பான செயல்பாட்டை அளித்திருந்தார். அந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லப் பிரதான காரணமாக இருந்தவரே அவர்தான். அந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார். அதன்பிறகுதான், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தார்.
இரண்டாம் இன்னிங்ஸில் பெரியளவில் சோபிக்கவில்லை என்றாலும் எல்லோருக்குமான பெரும் நம்பிக்கையாக மாறினார். மெது மெதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை நோக்கி நகர்ந்துவிட்டார். இந்நிலையில் இவரது வாழ்க்கை, திரைப்படமாக உருவாக இருக்கிறது என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது அது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் சார்பில் பூஷன் குமார் தயாரிக்கிறார்.
அவருடன் இணைந்து ரவி பாக்சந்த்கா தயாரிக்கிறார். தனது பயோபிக் படம் குறித்துப் பேசிய யுவராஜ் சிங், “பூஷன் மற்றும் ரவி ஆகிய இரண்டு தயாரிப்பாளர்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான எனது ரசிகர்களுக்கு என் கதையை வெளிப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.என் வாழ்வின் எல்லா உயர்வு தாழ்விலும் கிரிக்கெட் எனக்கு மிகப்பெரிய பலமாகவும், நான் நேசிக்கும் ஒன்றாகவும் இருந்துள்ளது. மற்றவர்கள் தங்கள் போராட்டங்களைச் சமாளித்து மீண்டெழவும், அசைக்க முடியாத கனவுகளை ஆர்வத்துடன் பின்தொடரவும் இந்தப் படம் ஊக்குவிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.