நாட்டையே உலுக்கிய சோகம்..! ‘கண்ணப்பா’ பட ட்ரெய்லர் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு..
அகமதாபாத் விமான விபத்து காரணமாக இந்தூரில் இன்று நடைபெற இருந்த ‘கண்ணப்பா’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி வரும் திரைப்படம் ‘கண்ணப்பா’. ஆன்மீக படமாக தயாராகி வரும் இந்தப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கண்ணப்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஒரு பான் இந்திய படமாக வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து பட புரோமோஷனில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, இன்று இந்தூரில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில், ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்து காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையம் அருகே உள்ள மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள ‘கண்ணப்பா’ படக்குழு, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை ஒத்திவைத்துள்ளது.