×

தீபாவளி 2024 வெளியாகும் 4 படங்கள்.. விவரங்கள் இதோ.. 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை ஒரே நாளில் நான்கு தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வருகிறது!

சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், கவினின் பிளடி பெக்கர் ஆகிய நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நாளை திரைக்கு வருகிறது. பண்டிகை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்புகள் உண்டு அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சினிமாவில் நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மறைந்த மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கையை தழுவி அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, வழக்கமான தனது உடல் மொழியை மாற்றி ராணுவ வீரராகவே பல்வேறு கட்ட பயிற்சிகளை எடுத்து முகுந்து வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி இதில் நடித்துள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் டீசர் ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான படங்களை விட அமரன் படத்திற்கு அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர். அக்கா தம்பி இடையிலான குடும்பப் பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்படமும் நாளை திரைக்கு வர உள்ளது. இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மற்றும் முக்கியமான அக்கா கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பூமிகா தமிழில் நடித்துள்ளார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய படங்களைத் தொடர்ந்து குடும்ப பின்னணியில் தான் நடித்துள்ள பிரதர் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது. 

வெங்கி அட்டூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் திரைப்படமும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை திரைக்கு வர உள்ளது. அமரன் படத்தை தொடர்ந்து லக்கி பாஸ்கர் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இரண்டு முறை ஏற்கனவே ரிலீஸ் தேதி மாற்றி அறிவித்த நிலையில் இறுதியாக தீபாவளி பண்டிகைக்கு படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிரபல இயக்குனர் நெல்சன் திலிப் குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் நாளை திரைக்கு வர உள்ளது. இதன் மூலம் பிரபல இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு டாடா படத்தின் மூலம் அனைவரது கவனத்தைப் பெற்ற ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு டார்க் காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவில் உள்ள நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மோத உள்ளதால் தீபாவளி ரேசில் எந்த படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.