×

ரஜினிக்கு ஜோடியாகும் 80-ஸ் நடிகை.. ‘லால் சலாம்‘ புதிய அப்டேட் 

 

‘லால் சலாம்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 80-ஸ் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. . கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தில் ரஜினியின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இன்னும் சில நாட்களே படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 80-ஸ் நடிகை நிரோஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்த போதிலும் ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. ஆனால் பல ஆண்டுகள் கழித்து ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடிக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது.