×

ஸ்ருதிஹாசனுக்கு சாதனையாளர் விருது.. வழங்கியது மத்திய அரசு !

 

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சாதனையாளர் விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.  கடந்த 2009-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘லக்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘7-ம் அறிவு’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.  இதையடுத்து தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விஷால் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் ‘லாபம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார்.  தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகளான இவர், தனது திறமையால் படிபடியாக முன்னேறி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட அவர், நடிகை, பின்னணி பாடகி, இசையமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், சமூகம் சார்ந்த விஷயங்களையும் முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சாதனையாளர் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஸ்ருதிஹாசனுக்கு வழங்கினார். இந்த விருது பல்வேறு தளங்களில் தேசத்திற்காக சேவை செய்ததற்காக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.