×

தொழிலதிபரை கரம்பிடிக்கும் நடிகை பூர்ணா... திருமணம் குறித்த அறிவிப்பு !

 

துபாய் தொழிலதிபர் ஒருவரை நடிகை பூர்ணா விரைவில் கரம்பிடிக்க உள்ளார்.

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. சினிமாவிற்காக இந்த பெயரை வைத்துக் கொண்டாலும், இவரின் உண்மையான பெயர் சாம்னா கசிம். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான், தலைவி, லாக்கப் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் எப்போதும் கம்பீரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பூர்ணாவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவர் யார் என்று நடிகை பூர்ணா அறிவித்துள்ளார். அதன்படி துபாயில் தொழிலதிபராக உள்ள சானித் ஆசிப் அலி என்பவரை தான் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் நடைபெற்றது. இதையடுத்து விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பூர்ணா, குடும்பத்தினர் ஆசீர்வாதத்துடன் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பூர்ணாவின் இந்த திருமண அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.