தனுஷூக்கு ஜோடியாகும் ‘டான்’ பட நடிகை... ‘கேப்டன் மில்லர்’ புதிய அறிவிப்பு !
தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பலமொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்போது நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோன்று ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு இன்று வெளியானது.
இந்த படங்களை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் 1930-ல் நடைபெற்ற மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 7-ஆம் தென்காசி பகுதியில் தொடங்குகிறது. தனுஷின் முதல் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.